வணக்கம் அன்புநிறை நெஞ்சங்களே!!
நான்காண்டு காலமாய் வலைப் பதிவுகளைப் படிப்பதுடன் சரி.
நேற்றுடன் திருமணமாகி ஓராண்டு நிறைவு. முதற் பதிவாய் என் திருமணம் பற்றியே எழுதலாமென்று நினைத்தேன்.
தெய்வத்தமிழ்த் திருமுறைத் திருமணம்
யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே!! எனும் குறுந்தொகை மொழிக்கேற்ப இருமனம் கலக்கும் திருமணம் தெய்வத்தமிழ்த் திருமுறை படி நடந்தேற எண்ணி இருந்நேன்.
என் மனைவி வீட்டார் வெளியில் செல்வதற்கே நேரம், சோதிடம் பார்ப்பவர்கள். அவர்களிடம் போய் தமிழ்த்திருமணம் பற்றி சொன்னால் கண்டிப்பாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று தெரியும். ஆனால் இதை ஒரு அன்பு கட்டளையாய் அவர்களிடம் வைத்தோம். வியப்பு என்னவென்றால் அவர்கள் முழு மனதுடன் சம்மதம் தெரிவித்தனர்.
திருமண அழைப்பும் முழுவதும் தமிழில் இருக்க வேண்டும் என்பது என் எண்ணம். இதோ என் திருமண அழைப்பிதழ்...
என் மனைவியின் இயற்பெயர் சக்தி. இது வடசொல். ஆதலால் பூங்கோதை என மாற்றி விட்டேன்.
சரி திருமணத்திற்கு போவோம்.
அன்று காலையில் இரு ஓதுவார்(தேவாரம்) மற்றும் தமிழ்த்திருமணம் செய்து வைக்கும் ஓர் வயது முதிர்ந்த புலவரும் திருமணப்பந்தலுக்கு வந்தனர்.பிராமணரைக் கொண்டு யாக குண்டம் வளர்த்து திருமணம் செய்யவில்லை. மாறாக
ஓதுவார் தேவாரம் பாட, புலவர் தமிழ்த்திருமண முறைகளை செய்ய திருமணம் இனிதே நடந்தேரியது.
1.இறைவணக்கம். தேவாரப் பதிகம்/வள்ளலார் பாடல். பிறகு விளக்கேற்றுதல்
2.பெற்றோர் வழிபாடு
3. இருவர்தம் பெற்றோரும் தமக்குள் மரியாதை செய்தல்
4. மணமக்கள் உறுதிமொழி
5. மங்கல நாண் வாழ்த்து பெறுதல்
6. நல்லுள்ளம் கொண்ட பெரியோர் கரங்களால் மங்கல நாண் பெறுதல்
7. மங்கல நாண் பூட்டுதல். "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்" தேவாரப் பதிகம்
8. திலகமிடுதல்
9.இடப்பக்கம் அமர்ந்திருக்கும் மணமகனை வலப்பக்கம் அமர வைத்தல். உமைக்கு சிவன் தன் இடப்பாகத்தை உணர்த்துவதாக இது செய்யப்படுகிறது.
10.மணமகளுக்கு நாத்தூண் நங்கை(கள்)(நாத்தனார்) பட்டம் சூட்டுதல். இல்லத்தரசி மணமகள் என்பதால் பட்டம் சூட்டுப்படுகிறது.
11. நன்றி நவிழல்
ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒர் தேவாரப் பதிகம் பாடப்பட்டது.
சில நண்பர்கள் தமிழ்த் திருமணம் பற்றி கேட்டதால் இதனை இங்கு பதிவு செய்தேன்.இன்னும் விரிவாக பிறிதொரு பதிவில் எழுதுகிறேன்.
Friday, August 21, 2009
Subscribe to:
Posts (Atom)